Friday, January 22, 2010

என் குரலை நெரித்த "கூறல்"

        பல மாதங்கள் கழித்து விடுமுறை. பொங்கலுக்காக. வீட்டிற்குச் சென்றேன். வழக்கம்போல் உண்டேன், உறங்கினேன் வேறென்ன கண்டேன். சில மாற்றம். அம்மாவழி தாத்தாவிடம். 95 வயதானவர். மூப்பின் காரணமாக காதுகேட்கும் திறன் முன்பே குறைந்திருந்தது. ஆனாலும் காலை 6  மணி முதல் 9  மணி வரை செய்திதாளில் வரி விளம்பரத்தை கூட விட்டு வைக்காத வாலிப வாசகன். கிரிகெட்டின் தீவிர ரசிகன். வீட்டுக்கு வருபவர்களின் உதட்டசைவை  வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்.  இப்படி கலகலவென இருந்தவர் தன் இருகை இடுக்கில்  சந்தோஷத்தை மறைத்து மௌனம் காத்தார். ஒபாமா முதல் ஊரில் ஓடிப்போன ஜோடிகள் வரை பேசும் உதடுகளின் மௌனம் என்னை ஏனோ செய்தது. அம்மாவிடம் விசாரித்ததில் மூப்பு அவரது பார்வையை மங்கச்செய்தபோது சத்தம் நழுவி, உதட்டசைவும் நழுவி யார் வந்திருக்கிறார்கள்  என்பதை உள்ளங்கையில் விரலால் எழுதியோ, அல்லது அவர்களை தொட்டு பார்த்தோதான் தெரிந்துகொள்கிறார்  என்பதை அறிந்தேன். விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்புமுன் அவரின் நடுங்கும் கரம் பற்றி உள்ளங்கையில் என் விரலால் ஆசிர்வதிக்குமாறு எழுதிவிட்டு அவரின் காலில் விழுந்து வணங்கி எழுந்து கண்டேன். "அவர்  கண்களில் கண்ணீர்". அன்று அர்த்தம் புரியவில்லை எனக்கு .....



             ஒருவார விடுமுறைக்கு பின் ஹய்தை நண்பர்களின் சந்திப்பு, சிந்திப்பு, சிரிப்பு, பூரிப்பு. எல்லாம் நடந்தேறி முடியும் தருவாயில் நண்பர் ஒருவர் (ஒரு வேலை மணிகுமாரோ!!!)  தன் மருத்துவ குறிபேடுகளின் நடுவில்  பொதித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை வாசிக்க தந்தார். அதில் திரு.வண்ணதாசன் அவர்கள் எழுதிருந்த "கூறல்" என்ற கதை என் குரலை நெரித்து. என் குருதியில் உறைந்திருந்த தாத்தாவின் கண்ணீருக்கான அர்த்தம் உணர்ந்தேன்.

"தாத்தா தனக்கான பாஷைய தன் பிடியைவிட்டு நழுவிச் செல்லும்போதெல்லாம் ஏதோ ஒரு வழியில் அதை கட்டிபோட்டு வைத்திருந்தார். ஆனால் பேச்சை அறிந்துகொள்ள முடியாமல் போவது தன் இருப்பை அர்த்தமற்று போகச் செய்கிறது என்ற உண்மையை அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை."

மேலே திரு.வண்ணதாசன் அவர்கள் விதைத்த வரிகள் என்னையும் உணரச் செய்தது. அவரின்(என் தாத்தா) கண்ணீர் சொல் நழுவி, தொடுதல் மட்டுமே சாத்தியமான மூப்பின் அரிய காட்சி அது. அவரின் மௌனம் அதற்க்கான சாட்சியாய் விளங்கியது. என் அறியாமை என்னும் இருளில் விட்டெறிந்த ஒளிகற்றை அந்த வைரவரிகள். மீண்டும் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளேன் வீட்டிற்கு செல்ல. மீண்டும் அவர் கரம் பற்றி அவரின் இருப்பை தொடுதலின்முலம் வியக்க.